Saturday, March 03, 2007

தொடரும் மரணங்களும் மவுனிக்கும் அரசும்

சமீப காலமாய் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொள்வது ஊடகங்களில் ஒரு அன்றாடச் செய்தியாகிவிட்டது. கடந்த ஆறு வாரங்களில் ஆந்திர மாநிலத்தில் மட்டும் 300 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதே இதற்கு சான்று.  ஊடகங்களைத் தொடர்ந்து கவனித்து வருவோருக்கு இந்தத் தற்கொலைகள் சுமார் 7 ஆண்டுகளாகத்தான் பெருகி வருகின்றது என்பது நிச்சயம் தெரிந்திருக்கும்.

உண்மையில் ஒரு விவசாயி என்பவன் அடிப்ப்டையில் ஒரு உற்பத்தியாளன். அது மட்டுமின்றி அவனொரு மிகச்சிறப்பானதொரு தொழிலின் முதலாளியும் கூட என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்நிலையில் கடனாளியாகும் எல்லா தரப்பினரும் தற்கொலை தான் செய்து கொள்கின்றனரா என்றால் இல்லை என்பதே பதில். மற்ற எல்லாவற்றையும் விட இறக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை மிகுந்தே உள்ளது.

மேற்கூறிய தற்கொலைகள் அதிகபட்சமாய் இருப்பது மகாராஷ்டிரம் மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களில் தான். அதிலும் குறிப்பாய் கவனிக்கப் பட வேண்டியது என்னவெனில் ஆந்திர மாநிலத்தில் இறந்த விவசாயிகளில் பலர் பருத்தி விவசாயிகள் என்பதே. ஆந்திராவில் முந்தைய காலத்தில் பருத்தி பயிரிடுவோர் குறைந்தே காணப்பட்டனர். ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல. 1987ஆம் ஆண்டு 0.4 மில்லியன் ஹெக்டேரில் மட்டும் பயிரிடப்பட்ட பருத்தியானது இன்றைக்கு 1.2 மில்லியன் ஹெக்டேர்களில் பயிரிடப்படுகிறது. ஊடகங்களில் இந்தத் தற்கொலைக்குக் கற்பிக்கப் படும் காரணம் "வறுமை" என்பதே. ஆனால் உண்மையில் இவை யாவற்றுக்கும் வருமை தான் காரணமா ?

எந்த ஒரு விவசாயியும் எப்போது தற்கொலை எண்ணத்திற்குப் போவான்?

"தன்னால் இனி தன் நிலத்தில் எதையும் உருவாக்க முடியாது எனும் நிலையில் தான் அவன் இந்த முடிவுக்கு வருவான்."

எதனால் ஒரு விவசாயியால் தன் நிலத்தில் எதையும் உருவாக்க முடியாது போகிறது என்பதே இங்கு முக்கியமான கேள்வி. இன்றைய தேதிக்கு உபயோகத்தில் உள்ள பூச்சிக் கொல்லிகள் மற்றும் விளைச்சலை பெருக்க்வதற்காய் பயன்படுத்தப் படும் சில ஜெனிடிக்கலி எஞ்சினியர்டு (genetically engineered crops) பயிர்களும் பிரதான காரணிகளாய் நான் கூறுவேன். இந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருப்பது BT Cotton எனும் ஒரு வகையான பருத்திப் பயிர். இந்த வகை பருத்தியானது அதிக மகசூலைத் தருவது என்னவோ நிஜம் தான் ஆனால் அதற்கு நாம் தரும் விலை என்ன என்று எல்லோரும் யோசிக்க வேண்டும். இந்த பருத்திப் பயிரை மேய்ந்த பல்லாயிரம் கால் நடைகள் சந்தேகத்திற்குரிய வகையில் அகால மரணமடைந்துள்ளன.  மேலும் இத்த்கைய பருத்தியை பயிர் செய்த விளை நிலங்கள் நச்சுத் தன்மை கொண்டதாய் மாறிவிடுதாகவும் கூற்ப்படுகிறது. எனினும் அது இன்னும் விஞ்ஞானப் பூர்வமாய் நிரூபிக்கப் படவில்லை. ஒரு வேளை அப்படி நிரூபிக்கப் படுவது பலரால் விரும்பபடவில்லை என்றும் நம்பும்படியான சில நிகழ்ச்சிகளும் நடந்த வண்ணம் உள்ளன.

ஒரு மசூதியினை இடித்து விட்டதற்கு வரிந்து கட்டிக் கொண்டு 24x7 அதை ஒளிபரப்பிய பல நூறு சானல்களும் பக்கம் பக்கமாய் பல நாட்க்களுக்கு செய்தி வெளியிட்ட அச்சு ஊடகங்களும் இந்த மாதிரியான கவலையளிக்கும் விஷயங்களில் அக்க்றை செலுத்தாதது பெரிதும் வருந்தத் தக்கது. நம்முடைய அரசாங்கமும் இத்தகைய நிகழ்ச்சிகளை பெரிது படுத்துவதாகத் தெரியவில்லை. எல்லா விவசாய நிலங்களையும் குறுகியகால லாபம் கருது மாசு படுத்திவிட்டு நாளைய தேவைக்கு என்ன செய்வதாய் உத்தேசம் ?

இந்த கனத்த மவுனத்தைக் கைவிட்டு அரசு இவற்றுக்கு பதிலளிக்குமா ?

ஊடகங்கள் இந்த விஷயத்துக்காக போராடுமா ?

2 comments:

dondu(#11168674346665545885) said...

//உண்மையில் ஒரு விவசாயி என்பவன் அடிப்ப்டையில் ஒரு உற்பத்தியாளன். அது மட்டுமின்றி அவனொரு மிகச்சிறப்பானதொரு தொழிலின் முதலாளியும் கூட என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.//
ஆனால் சுதந்திரமில்லாத உற்பத்தியாளன்/முதலாளி. உற்பத்திக்கு தேவைப்படும் எல்லா பொருட்களும் விலை உயர்ந்த போதிலும் இவன் விற்கும் பொருட்களுக்கு மட்டும் கட்டுப்பாடு. இது எந்த ஊர் நியாயம்?

நகரத்தில் வசிப்பவர்கள் நலனை மட்டுமே அரசு நினைவில் கொள்கிறது, ஏனெனில் வோட்டு அங்குதான் அதிகம்.

அதே போல பண முதலைகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வங்கிகளிடமிருந்து வாராக் கடன்களை பெற்றாலும் அவர்கள் பெயர்களைக் கூட அரசு வெளியிட மறுக்கிறது. ஆனால் விவசாயியின் வீட்டுக்கு போய் வங்கி அதிகாரிகள் ருத்ர தாண்டவமே ஆடிவிடுகின்றனர்.

விளைவு என்னவென்றால் நிலங்கள் எல்லாம் மெதுவாக பிளாட்டுகள் போடப்பட்டு விற்பனை ஆகின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் said...

//அதே போல பண முதலைகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வங்கிகளிடமிருந்து வாராக் கடன்களை பெற்றாலும் அவர்கள் பெயர்களைக் கூட அரசு வெளியிட மறுக்கிறது. ஆனால் விவசாயியின் வீட்டுக்கு போய் வங்கி அதிகாரிகள் ருத்ர தாண்டவமே ஆடிவிடுகின்றனர்.//

மிகவும் சரியான ஒரு விஷயம் ராகவன். இன்று பெரும் பெயருடன் விளங்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் இன்னும் பல ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. ஆனால் அதைப் பற்றி அரசு ஒரு போதும் பேசுவதில்லை. ஆனால் ஒரு சாதாரணன் ஒரு 1000 ரூபாய் பாக்கிவைத்து விட்டால் போதும் உடனே வீட்டிற்கு அடியாள் வரை அனுப்புகிறது இன்றையய வங்கிகள்.