Friday, August 22, 2008

சொற்கம் சிறையிலே

சமீப காலமாக ஊடகங்களில் பெரிதும் அடிபடும் விஷயம் சிறைகளில் நடக்கும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் தாம். தவறு செய்தவர்கள் தம் தவறுகளை உணர்ந்து திருந்த ஒரு சந்தர்பத்தை உருவாக்க சிறைச்சாலைகள் உதவ வேண்டும் என்பது ஏட்டளவில் தான் உள்ளது. ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவாது என்று சும்மாவா சொன்னார்கள்.

பல தீவிரவாதிகளும் இன்ன பிற சமூக விரோதிகளும் பாதுகாப்பாய் தங்கள் சதிகளை திட்டமிடவும் நிறைவேற்றவும் சிறைகள் பெரும் வசதி மிக்க ஒரு இடமாக மாறிவிட்டது. ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றனவாய் உள்ளன. இன்றைய நிலையில் ஒரு சிறைக்குள் கிடைக்காத விஷயமே இல்லை என்று ஆகிவிட்டது. பணமும் பலமும் மட்டும் இருந்தால் போது ஒரு சிறைவாசி கேட்க்கும் எதுவும் கிடைத்துவிடும் என்ற நிலை இன்று இருந்து வருகிறது. பல சிறைச்சாலைகளில் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு விலை பட்டியல் போட்டு அது படி பெரும் வசூல் வேட்டை நடைபெறுகிறது. உதாரணமாக வேலூர் மத்திய சிறையில் உள்ள ஒரு விலைப் பட்டியல் உங்கள் பார்வைக்கு:
ஒரு நிமிடம் மொபைல் போனில் பேச: ரூ 20/-
சொந்த மொபைல் வைத்துக்கொள்ள தினம் ரூ 200/-
ரீசார்ஜ் செய்ய மாதம் ரூ 3050/-
வெளியில் உள்ள விலைவாசியில் மண்டை உடைகிறது என்றால் உள்ளே அதற்கு மேல் விலைவாசி. சிறை துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இவற்றை எல்லாம் கண்டும் காணாத விதமாக நடந்து கொள்கிறது அரசு. சமீபத்தில் பல முக்கிய நகரங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் பல சிறையில் இருந்தபடி திட்டமிடப்பட்டது என்பது மிகவும் வேதனை தரும் விஷயம். பொருளாதாரத்திலும் அறிவுத்திறனிலும் விஞ்ஞானத்திலும் பல மேலை நாடுகளுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கும் நாம் அடிப்படை விஷயங்களான தேசிய பாதுகாப்பு போன்ற விஷயங்களை சரியாக கவனிக்காமல் இருத்தல் வருந்தத் தக்கது. ஆட்சி முறையில் முக்கிய பொருப்புகள் வகிக்கும் அதிகாரிகள் செயலற்று போவது அல்லது ஊழலில் திளைப்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் இடர்களை விளைவிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஆட்சியாளர்களுக்கு நாட்டின் நலனில் எந்த ஒரு அக்கறையும் இல்லை என்பதை தான் சமீபத்திய சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
திரைப்படங்களுக்கு கதை எழுதுவதையும் திருக்குறளுக்கு உரை எழுதுவதையும் விடுத்து செய்ய வேண்டிய செயல்களில் முதல்வர் கொஞ்சம் கவனம் செலுத்தினால் அவருக்கு புண்ணியமாய் இருக்கும். பல உயிர்கள் காக்கப் படும். காவல் துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் உடனடியாக தலையிட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் சிறைவாசிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் சிறைகள் சொற்கங்களாகத்தான் இருக்கும்.

2 comments:

மாசிலா said...

//பணமும் பலமும் மட்டும் இருந்தால் போது ஒரு சிறைவாசி கேட்க்கும் எதுவும் கிடைத்துவிடும் என்ற நிலை இன்று இருந்து வருகிறது// =பணமென்னும் இக்காலத்திய அதிபெரும் கடவுள் தூணிலும் சிறைச்சாலைகளின் துரும்பிலும்கூட இருப்பார்.

//பல சிறைச்சாலைகளில் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு விலை பட்டியல் போட்டு அது படி பெரும் வசூல் வேட்டை நடைபெறுகிறது. உதாரணமாக வேலூர் மத்திய சிறையில் உள்ள ஒரு விலைப் பட்டியல் உங்கள் பார்வைக்கு:
ஒரு நிமிடம் மொபைல் போனில் பேச: ரூ 20/-
சொந்த மொபைல் வைத்துக்கொள்ள தினம் ரூ 200/-
ரீசார்ஜ் செய்ய மாதம் ரூ 3050/‍.//
=அப்படீன்னா நம்ம சிறைச்சாலைகள் ஒருவித சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) என சொல்கிறீர்களா? :‍)


//சிறை துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.//
=எல்லாவற்றிலும் அவங்களுக்கும் கொஞ்சம் கைமாத்து கிடைக்காமல் இப்படி எதுவும் நடக்காதுங்க.

//இவற்றை எல்லாம் கண்டும் காணாத விதமாக நடந்து கொள்கிறது அரசு//
=இது எநத அளவிற்கு உண்மைன்னு சொல்ல முடியாதுங்க. என்னை பொறுத்தவரை அரசாங்கத்திற்கு தெரிந்தும் இதுபோல் நடக்கிறதுக்கு வாய்ப்பு இல்லைங்க. ஏன்னா, திற‌மான எதிர்கட்சிகள் இருந்தா இதுபோல் நடக்கவும் விடமாட்டாங்க. எனவே, இந்த அளவு ஆளும் கட்சிகள் அநியாயங்கள் செய்கிறதென்றால், அதற்கு சோம்பேறி எதிர்கட்சிகளும் ஒரு காரணம்தானுங்க.

//சமீபத்தில் பல முக்கிய நகரங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் பல சிறையில் இருந்தபடி திட்டமிடப்பட்டது என்பது மிகவும் வேதனை தரும் விஷயம்//
=சிபாரிசு, அன்பளிப்பு, இலஞ்சம், மேல் சாதிக்கார திமிர் அடிப்படையில் வேலையில் சேரும திறமையற்ற கேணைகள் பூழ்த்து கிடக்கும் இதுபோன்ற துறைகளில் நல்லது எதையும் பார்க்க முடியாதுங்க. சமுதாயத்தின் அடித்தள சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடைஞ்சல் கொடுத்து அவர்களின் இரத்தத்தை குடிக்க கற்றுக்கொண்ட அளவுக்கு பேட்டை பிஸ்தாக்கள், தீவிரவதிகள், அடாவடி அரசியல்வாதி்கள், பணக்கார இரவுடிகள் ஆகியோர்கள் செய்யும் ஈனச்செயல்களை எதிர்த்து இவர்களால் எதுவும் செய்ய முடியாதுங்க.

//பொருளாதாரத்திலும் அறிவுத்திறனிலும் விஞ்ஞானத்திலும் பல மேலை நாடுகளுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கும் நாம் ... //
=முதலில் உள்நாட்டிலேயே "அனைவருக்கும் அனைத்தும் சமம்" என்கிற சமத்துவ சமநிலையை கொண்டுவரச் சொல்லுங்க. சக மனிதனை ஒரு சாதாரண மனிதனாக மதிக்க முயற்சிப்போமுங்க. ஏன்னா ஆரம்பமே இங்கிருந்துதான் கிளம்புதுங்க.

//அடிப்படை விஷயங்களான தேசிய பாதுகாப்பு போன்ற விஷயங்களை சரியாக கவனிக்காமல் இருத்தல் வருந்தத் தக்கது.//
=அவனவன் பொண்டாட்டி புள்ளைங்க, பேரப்புள்ளைங்க, மாமன், மச்சான்கள் ... இப்படின்னு பல தலைமுறைகளுக்கும் பணம் சொத்து சேர்க்கறதுக்குதானுங்க இந்த மாதிரி அதிகாரிங்க வேலைகள். இதுல அவங்க எங்க நாட்டு நலைனை பற்றி கவலை படப்போறாங்க? அதெல்லாம் வருடத்திற்கு இரண்டு நாட்கள் (26/01 ; 15/07) மட்டும்தாங்க.

//ஆட்சி முறையில் முக்கிய பொருப்புகள் வகிக்கும் அதிகாரிகள் செயலற்று போவது அல்லது ஊழலில் திளைப்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் இடர்களை விளைவிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.//
=முதலில் இதை அதிகாரிகளே புரிந்து கொள்ளவேண்டும். அவங்க படிக்கிற IAS சில் இதெல்லாம் சொல்லித்தராமல் இருக்கமாட்டாங்க.

//ஆட்சியாளர்களுக்கு நாட்டின் நலனில் எந்த ஒரு அக்கறையும் இல்லை என்பதை தான் சமீபத்திய சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.//
=இப்படி ஒரெடியாக எந்த அக்கறையும் இல்லைன்னு சொல்றது தப்புங்க. தப்பு செய்யறது அதிகாரிங்க. பொறுப்பு முழுதும் அரசியல் தலைவர்களுக்கா? அப்படீன்னா அதிகாரிங்க எதற்கு இருக்காங்க?

//திரைப்படங்களுக்கு கதை எழுதுவதையும் திருக்குறளுக்கு உரை எழுதுவதையும் விடுத்து செய்ய வேண்டிய செயல்களில் முதல்வர் கொஞ்சம் கவனம் செலுத்தினால் அவருக்கு புண்ணியமாய் இருக்கும்.//
=இது மொழிக்காக செய்யும் ஒரு தமிழ்த்தொண்டுன்னு எடுத்துக்கொள்ள கூடாதா? இன்றைக்கும் பல அரசியல் (கட்சி) தலைவர்கள் சினிமாக்களில் தொடர்ந்து நடித்தும் வருகிறார்களே, இதைப்பற்றிய‌ உங்கள் கருத்து என்ன?

//காவல் துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் உடனடியாக தலையிட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் சிறைவாசிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் சிறைகள் சொற்கங்களாகத்தான் இருக்கும்.//
=எங்கேயோ ஆரம்பித்து இப்படி கொண்டுவந்து முடித்துவிட்டீர்களே! பறந்த மனதோடு அரம்பமான உங்க அலசல் இப்படி குறுகிய எல்லைக்கும் அகப்பட்டு கொஞ்சம் சிறுத்துப் போய்விட்டது வருந்தத் த்க்கதே.

உங்களடைய குறியெல்லாம் இன்றைய தமிழக முதல்வர் அரசியல் மீது மட்டுமா? அல்லது அவரது கொள்கைகளா? இது போன்ற அநியாயங்கள் இன்று மட்டும் நடப்பதல்லவே! இந்தியாவில் காலம் காலமாக நடந்துகொண்டுதான் வருகிறது. திறங்கெட்ட எதிர்கட்சிகளும் இதற்கு ஒரு காரணம். ஒரு தேர்தாலில் தோற்றுவிட்டால், அதோடு அடுத்த தேர்தல் வரும்வரையில் பஜனைகள் பாடிக்கொண்டு சொகுசு பங்களாக்களில் சதா ஓய்வெடுத்துக் கொண்டு கிடக்கும் எதிர் கட்சித் தலைவர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்து வந்தால் இதுபோன்ற அநியாயங்கள் பலவற்றை தடுத்து நிற்த்தலாம். மாறாக, இது போன்ற அநியாயங்களை வேண்டுமென்றே செயலேறவிட்டு பின்னால் அதையே முதலீடாக வைத்து குறைகூறி ஆளும் கட்சியின் அரசியலை உடைத்து மறுபடியும் தோற்ற கட்சியி்னர் பதவிக்கு வர உபயோகிக்கும் செத்த பிணம் தின்னி கழுகு அரசியலாகிவிட்டது.

எனவே, இன்றைய அரசியல் மற்றும் சமுதாய போக்குகளுக்கு அனைவருமே பொறுப்பு என்கிற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மதுசூதனன் ராமானுஜம்.

Madhusudhanan Ramanujam said...

//இது எநத அளவிற்கு உண்மைன்னு சொல்ல முடியாதுங்க. என்னை பொறுத்தவரை அரசாங்கத்திற்கு தெரிந்தும் இதுபோல் நடக்கிறதுக்கு வாய்ப்பு இல்லைங்க.//

என்னங்க காமெடி பண்றீங்க. நீங்க சொல்றதை பார்த்தா நாட்டில் நடக்கும் எந்த ஒரு சட்ட ஒழுங்கு மீறலும் அரசாங்கத்திற்கும் அரசியல்வாதிகளுக்குக்ம் தெரியாதுன்னு சொல்றமாதிரி இருக்கு. எல்லா அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மோசமானவர்கள் என்பது என் கருத்தல்ல. ஆனால் பலர் அவ்வாறு உள்ளனர் என்பதுதான் நிஜம்.

//திற‌மான எதிர்கட்சிகள் இருந்தா இதுபோல் நடக்கவும் விடமாட்டாங்க//
நீங்க சொல்றதை பார்த்தால் நல்ல எதிர்கட்சிகள் இருந்தால் நாட்டில் தப்பு நடக்காது என்று சொல்வது போலுள்ளது. எதிர்கட்சிகள் கோஷம் மட்டுமே போட முடியும். அப்படி இண்று போடப்படும் கோஷங்களும் தங்கள் அரசியல் விளம்பரத்துக்காக மட்டுமே என்ற நிலை தான் நம் நாட்டில் உள்ளது. எதிர்கட்சிகள் சரியில்லை எனும் உங்கள் கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்.

//சிபாரிசு, அன்பளிப்பு, இலஞ்சம், மேல் சாதிக்கார திமிர் அடிப்படையில் வேலையில் சேரும //
இங்கு நான் பேசும் விஷயத்துக்கும் நீங்கள் சொல்லு சாதி சமாச்சாரத்துக்கும் சம்பந்தமே இல்லை. எனவே இது வேண்டாமே ப்ளீஸ்...

//இப்படி ஒரெடியாக எந்த அக்கறையும் இல்லைன்னு சொல்றது தப்புங்க. தப்பு செய்யறது அதிகாரிங்க. பொறுப்பு முழுதும் அரசியல் தலைவர்களுக்கா? அப்படீன்னா அதிகாரிங்க எதற்கு இருக்காங்க?//
நம் நாட்டில் அரசியல்வாதிகளுக்கு வளைந்து கொடுக்காத பல சிவில் சர்வீஸ் அதிகாரிகள் பற்றி நான் அறிவேன். ஆனால் அப்படிப் பட்ட அதிகாரிகள் இன்று மிகவும் குறைந்த அளவில் தான் உள்ளார்கள். அப்படி உள்ளவர்களும் பலம் மிக்க பொறுப்புகளில் இல்லை என்பது தான் நிஜம்.

தமிழகத்தை பொருத்தவரை அதிகாரிகள் ஊழல்களில் ஈடு படுதல் மிக அதிக அளவில் ஆரம்பமானது திராவிட கட்சிகள் தமிழகத்தை ஆள ஆரமித்த பின்புதான். நேற்றும் இன்றும் தமிழகத்தை ஆண்டு வந்த / வரும் திராவிட கட்சிகள் நாட்டுக்கு ஆற்றிய அரும் தொண்டை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நான் நினைக்கிறேன்.

//இது மொழிக்காக செய்யும் ஒரு தமிழ்த்தொண்டுன்னு எடுத்துக்கொள்ள கூடாதா? இன்றைக்கும் பல அரசியல் (கட்சி) தலைவர்கள் சினிமாக்களில் தொடர்ந்து நடித்தும் வருகிறார்களே, இதைப்பற்றிய‌ உங்கள் கருத்து என்ன?//
அவரவர் எடுத்துக் கொண்டுள்ள பொருப்புகளில் சரியாகச் செயல் பட்டால் போதும், எல்லா விஷயங்களும் ஒழுங்காகவே இருக்கும். சினிமாவில் கதை வசனம் எழுதிதான் தமிழை வளர்க்க முடியும் என்பது மிகவும் அபத்தமான ஒரு விஷயம். அதற்கு வேறு எவ்வளவோ வழிகள் உள்ளன. மேலும் தமிழகத்தில் ஐந்து முறைக்கு மேல் முதல்வர் ஆன எவரும் சினிமாவில் பணியாற்றுவதாய் எனக்குத் தெரியவில்லை.

//எங்கேயோ ஆரம்பித்து இப்படி கொண்டுவந்து முடித்துவிட்டீர்களே! பறந்த மனதோடு அரம்பமான உங்க அலசல் இப்படி குறுகிய எல்லைக்கும் அகப்பட்டு கொஞ்சம் சிறுத்துப் போய்விட்டது வருந்தத் த்க்கதே//

//உங்களடைய குறியெல்லாம் இன்றைய தமிழக முதல்வர் அரசியல் மீது மட்டுமா? அல்லது அவரது கொள்கைகளா? இது போன்ற அநியாயங்கள் இன்று மட்டும் நடப்பதல்லவே!//

முதல்வரின் பொருப்பு என்ன என்பதை சுட்டிக் காட்ட மட்டுமே நான் விரும்புகிறேன். மற்றபடி எனக்கு அவர் மீது தனிப்பட்ட விருப்போ அல்லது வெறுப்போ இல்லை.

//திறங்கெட்ட எதிர்கட்சிகளும் இதற்கு ஒரு காரணம். ஒரு தேர்தாலில் தோற்றுவிட்டால், அதோடு அடுத்த தேர்தல் வரும்வரையில் பஜனைகள் பாடிக்கொண்டு சொகுசு பங்களாக்களில் சதா ஓய்வெடுத்துக் கொண்டு கிடக்கும் எதிர் கட்சித் தலைவர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்து வந்தால் இதுபோன்ற அநியாயங்கள் பலவற்றை தடுத்து நிற்த்தலாம். மாறாக, இது போன்ற அநியாயங்களை வேண்டுமென்றே செயலேறவிட்டு பின்னால் அதையே முதலீடாக வைத்து குறைகூறி ஆளும் கட்சியின் அரசியலை உடைத்து மறுபடியும் தோற்ற கட்சியி்னர் பதவிக்கு வர உபயோகிக்கும் செத்த பிணம் தின்னி கழுகு அரசியலாகிவிட்டது...//

அப்படியானால் ஆட்சியில் இருப்பவர்கள் இதை தடுக்க வேண்டியது தானே? அவர்களுக்கு இல்லாத பலமா அல்லது உரிமையா? ஆட்சி முறையில் ஏற்படும் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டியது ஒரு பொருப்பான எதிர் கட்சியின் கடமை என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் சுட்டிக் காட்டியபின் தான் ஆட்சியாளர்களுக்கு இது தெரிய வேண்டும் எனில் அதைவிட வெட்கக் கேட்டு வேறென்ன இருக்க முடியும்?