Monday, October 06, 2008

வின்செண்ட் தென்னரசு, வில்லுக்குறி, கன்யாகுமரி

இன்று ஒரு பதிவர் தனது ஆசிரியர் குறித்து தன் பதிவில் ஒரு இடுகையை எழுதி இருந்தார். அதை பார்த்தவுடன், அட நாமும் நம்ம ஆசிரியரை தேடிக்கொண்டு தானே இருக்கிறோம், அதனால் நாமும் இப்படி ஒரு பதிவிட்டு இணைய நண்பர்கள் எவருக்கேனும் அவர் இப்போது இருக்கும் இடம் தெரிந்தால் அவருடன் தொடர்பு கொள்ளலாம் என்று தோன்றவே, இதோ எழுதிவிட்டேன்.

பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நான் படித்த பள்ளியில் (சக்ரவர்த்தி இண்டர்நேஷனல் மெட்ரிகுலேஷன் அக்காடமி) எங்களுக்கு கணினியை அறிமுகம் செய்தனர். இன்று அந்தப்பள்ளி சென்னை பரங்கி மலையில் பிஎஸ்பிபி ஆக உரு மாறிவிட்டது. அப்போதிருந்தே இந்தக் கணினி மீது ஒரு பெரும் ஆர்வம் வந்து ஒட்டிக் கொண்டது. என் போதாத நேரம் நானே என்னை பல்வேறு வழிகளில் பாழாக்கிக் கொண்டதன் விளைவு, அந்தப் பள்ளியில் என்னால் நான்காண்டுகளுக்கு மேல் படிக்க முடியவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் என் பள்ளி முதல்வர் என் சீட்டை கிழித்துவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். அன்று என் பெற்றோருக்கு என்னால் ஏற்பட்ட தலை குனிவுதான் என் வாழ்வில் என்னை மிகவும் பாதித்த ஒரு சம்பவம். அதன் பின்னர் என் 9, 10 ஆகிய இரு வகுப்புக்களை வேறொரு பள்ளியில் படித்தேன். அந்தப் பள்ளியில் கணினி கிலோ என்ன விலை என்று கேட்க்கும் மக்கள் தான் இருந்தனர். ஆனால் என் பெற்றோருக்கு என்னால் நேர்ந்த்த மோசமான அனுபவம் என்னை படிப்பில் கவனம் செலுத்தப் பெரிதும் தூண்டியது. ஓரிலக்கத்தில் மட்டுமே மதிப்பெண் வாங்கிய, பார்டரில் கூட பாஸ் பண்ண முடியாத நான் பள்ளியில் எப்போதும் இரண்டு / மூன்றாம் இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டேன். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் அவ்வாறே நின்றேன்.

இதன் பின்னர் என் 11,12ஆம் வகுப்பிற்கு சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள மவுண்ட் கிறிஸ்டியன் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு (Mounth Christian Matric Higherr Secondary School, Adambakkam) மாறினேன். இந்த இரண்டு வருடங்கள் என் வாழ்வின் வசந்த காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. இங்கு தான் நான் ”வின்செண்ட் தென்னரசு” அற்புதமான மனிதரை சந்தித்தேன். அவர் தான் எனக்கு கணினி ஆசிரியர். எனக்கு கணினியின் பால் இருந்த காதலை உணர்ந்து என்னை அந்தப் பாதையில் சீராய் வழிநடத்தியவர் அவர் தான். அவரின் மேற்பார்வையில் பல அடிப்படை நுணுக்கங்களை கற்றுத் தெளிந்த்தேன். அது என் பிந்தைய வாழ்வில் எந்த அளவுக்கு எனக்கு உதவியுள்ளது என்பதற்கு என் இன்றைய நல்ல நிலை ஒரு சாட்சி.

என் பள்ளி இறுதியாண்டிற்கு பிறகு, சுமார் ஒரு வருட காலம் அவருடனான தொடர்பு நிலைத்தது. ஆனால் அதன் பின்னர் அவர் எங்கு மறைந்தார் என்ன ஆனார் என்று ஒரு தகவலும் இல்லை. இன்றும் நான் அவரை தேடிக்கொண்டு தான் இருக்கிறேன். எனக்கு அவர் பற்றி தெரிந்த விபரங்கள் இதோ கீழே. அவர் பற்றி எவருக்கேனும் தகவல் தெரியும் எனில் தயவு செய்து எனக்கு பின்னூட்டம் இடவும்.

பெயர்: வின்செண்ட் தென்னரசு / Vicent Thennarasu
ஊர்: வில்லுக்குரி, கன்யாகுமரி மாவட்டம் / Villukkuri, Kanyakumari
கடைசியாக பார்த்த இடம்: ஆதம்பாக்கம், சென்னை - 600088 / Adambakkam, Chennai, Madras
எனக்குத் தெரிந்து அவர் கடைசியாக வேலை பார்த்த இடம்: மவுண்ட் கிறிஸ்டியன் மெட்ரிகுலேஷன் உயர்நிலை பள்ளி / Mount Christian Matriculation Higher Secondary School

No comments: