Sunday, November 16, 2008

தமிழக காவல் துறைக்கு வெட்க்கக் கேடு

சமீபத்தில் நடந்த நடந்த சாதிச் சண்டை ஒன்று ஒருவரின் உயிரை பலிவாங்கியதில் வந்து நின்றுள்ளது. இதில் என்ன வேடிக்கை என்றால் சாதிச் சண்டை நடந்த இடம் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி. அடித்துக் கொண்டவர்கள் அக்கல்லூரியின் மாணவர்கள். நாளைய தினம் சட்டத்தினை காவல் துறையினருடன் இணைந்து காப்பாற்றும் பொருப்பை ஏற்க வேண்டிய சட்டக் கல்லூரி மாணவர்கள் சாதியின் பெயரால் அடித்துக் கொள்வது எப்பேர்பட்ட ஒரு தவறு. அதுவும் இந்த அடிதடி காவலர்கள் முன்னிலையில் நடந்தேறியது என்பதுதான் வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயம்.

இத்தகைய நிகழ்வுகள் காவல் துறையின் மீது மக்களுக்கு பெரிதும் அவநம்பிக்கை ஏற்படுத்தக் கூடியவை என்பதை அவர்கள் எப்படி மறந்தார்கள்? இந்த அடிதடியின்போது அங்கு குழுமி இருந்த காவலர்கள் அனைவரும், மக்களையும் சட்டத்தையும் எந்த சூழ்நிலையிலும் காப்போம் என்று உறுதி ஏற்றவர்கள் தானே? அப்படி இருக்க இவர்கள் கண் முன்னே ஒருவரை அடித்துக் கொல்லும்வரை பார்த்துக்கொண்டு வெறுமே நின்றது மன்னிக்க முடியாத குற்றம். இந்த அதிகாரிகள் அனைவரின் மீதும் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு விசாரனை நடத்தப்பட வேண்டும். காவல் துறை நினைத்திருந்தால் அதை தடுத்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. இவ்வளவு பெரிய விஷயத்தில் காவல்துறை செயல்படாது நின்று வெறுமே வேடிக்கை பார்ப்பது சாதரணமான விஷயமில்லை. இதற்கு நிச்சயம் பெரும் அரசியல் பின்புலம் இல்லாது இருக்காது. சம்பந்தப் பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனே கைது செய்து சிறையில் அடைக்க முதல்வர் உத்தரவிடவேண்டும். இந்தச் சம்பவம் சில தரப்பினரிடையே பழிவாங்கும் நோக்கை நிச்சயம் வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இதன் மூலம் இனி பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி இனி இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாத்தலும் வேண்டும் என முதல்வரை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

1 comment:

Anonymous said...

.