Monday, December 12, 2011

அலட்சியம் இல்லாமல் வேறென்ன?

சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்த கோரமான தீ விபத்து கிட்டத்தட்ட எண்பது பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ஊடகங்கள் பலவும், இன்ன பிற மருத்துவமனைகளில் உள்ள தீயணைப்பு, மற்றும் பாதுகாப்பு முறைகள் பற்றி கேள்வி எழுப்பியுள்ளன.
ஆனால் இது எதற்கும் மாநில அரசுகளோ அல்லது மதிய அரசுகளோ எந்த ஒரு தெளிவான பதிலையும் தந்ததாகத் தெரியவில்லை. எப்போதெல்லாம் இது போன்ற விபத்துகளால் இழப்புகள் ஏற்படுகின்றதோ அப்போதெல்லாம் நம் நாட்டை ஆளும் அரசியல் பெருமக்கள், தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டு, பொது மக்களின் பணத்தை இழப்பீடு எனும் பெயரில் வாரி இறைத்து தத்தம் கட்சிகளுக்கு வாக்குகள் சேகரிக்கும் புண்ணியப் பணியில் ஈடுபடுகின்றனர். மக்களும் கொஞ்ச காலத்திற்கு புலம்பித் தள்ளிவிட்டு, வேறு வேலையை பார்க்க கிளம்பிவிடுகின்றனர்.

இந்த சமயத்தில், குடந்தையில் (கும்பகோணம்) ஒரு பள்ளியில் நடந்த இது போன்ற ஒரு தீ விபத்தையும் நினைவு படுத்த வேண்டி வருகிறது. எத்தனை குழந்தைகள் அந்தத் தீயிலும் புகையிலும் சிக்கி மாண்டு போயினர், ஆனால் இதற்குப் பின்னரும், நம் மாநில அரசு, பள்ளிகளில் இது போன்ற அவசர காலங்களை சமாளிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றிய சட்டங்களை கடுமையாக நடைமுறை படுத்துவதில்லை. விபத்துகளுக்கும், இழப்பீடுகளுக்கும் அந்தந்த அரசுத் துறைகளோ அல்லது தனியார் நிறுவனமோ தான் பொறுப்பேற்கவேண்டும் எண்பது போன்ற கடுமையான விதிமுறைகளும் தேவை.

ஆனால் நம் அரசியல் கட்சிகளுக்கு எங்கே இதற்க்கெல்லாம் நேரம்? எந்த அண்டை மாநிலத்துடன் சண்டை போடலாம், எங்கே எவ்வளவு ஊழல் பண்ணலாம் என்று யோசிக்கவே நேரமில்லை. இவர்களை மட்டும் சொல்லிக் குற்றமில்லை, எல்லாம் நம்முடைய அலட்சியம். அலட்சியமில்லாமல் வேறென்ன?

No comments: