Sunday, January 01, 2012

மீண்டும் மீண்டும் வா...

ஒவ்வொரு வருடமும் கடலோர தமிழக மாவட்டங்கள் புயல்களால் கடுமையாக தாக்கப் படுவதும் வெள்ள நிவாரணம் வழங்குவது போல நடித்து ஓட்டு வங்கியை வளர்க்க  அரசியல்வாதிகள் பாடு படுவதும் தீபாவளி பொங்கல் போல வழக்கமான ஒரு விஷயமாகிப் போய்விட்டது. பொது நலன் கருதி சரியான வெள்ள நீர் வடிகால்கள், வாய்க்கால்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு விஷயங்களில் மக்களின் வரிப்பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக, கட்சி பேதமின்றி எல்லோரும் இலவசங்களை வாரி வழங்குவதில் காட்டும் அக்கரையில் ஒரு சிறு சதவிகிதத்தையாவது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் காட்டி இருந்தால் நன்றாக இருக்கும்.

வருஷா வருஷம் இப்படி நிவாரணம் என்னும் பெயரில் செலவிடப்படும் தொகை பல நூறு கொடிகளைத் தாண்டும். இப்படி தனி நபர் நிவாரங்கள் வழங்குவதற்கு பதிலாக, இந்தத் தொகையை முன்னர் சொன்னது போல அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் பயன்படுத்த வேண்டும் என்பதை மக்கள் வலியுறுத்த வேண்டும். இதில் முக்கியமாக கவினிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த நிவாரணம் எதுவும் சரியான முறையில் மக்களை சென்றடைவதே இல்லை என்பது தான். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இது தான் இன்றைய நடை முறை. இலவசங்களே கூடாது என்பது அல்ல என் கருது, ஆனால் எதை இலவசமாக குடுப்பது என்ற ஒரு வரையறை வேண்டும் என்பதே. என் போன்ற சில அம்மாஞ்சிகள் இப்படிப் புலம்பிக் கொண்டிருக்கையில் அரசியல் கட்சிகள் யாவும் புயல்களை "மீண்டும் மீண்டும் வா" என்று வரவேற்றுக் கொண்டிருப்பார்கள்...

No comments: